தேர்தலில் வெற்றி பெற்றாலும் எம்.பி பதவி பறிபோகும்! மஹிந்த எச்சரிக்கை
அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்து அல்லது மதஸ்தலங்களில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானாலும் அவரது எம்.பி. பதவி பறிபோகக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
விவாதமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிடுகையில்,
மதஸ்தலங்கள் மற்றும் புனித இடங்களில் கட்சி வேட்பாளர்களை ஊக்குவித்து பிரசாரம் மேற்கொள்வது 1981ஆம் பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 79 ஆவது பிரிவின் கீழ் கடுமையான குற்றமாகும்.
இதனை அழுத்தமாக கூறிக்கொள்ள விருப்புகின்றோம். இதனை மீறிச் செயற்படும் பட்சத்தில் ஒருவர் வெற்றிப்பெற்றாலும் அவரின் எம்.பி. பதவி பறிபோகும்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் பலர் அரச வாகனங்களை பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அரச வாகனங்களை தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்துவது பாரிய குற்றமாகும் என்றார்.