தகாத உறவுக்கு தடையாக இருந்த 4 வயது மகனை அடித்து கொலைசெய்த பெண்ணுக்கு 17 வருட சிறை!

தகாத உறவுக்கு தடையாக இருந்த 4 வயது மகனை அடித்து கொலைசெய்த பெண்ணுக்கு 17 வருட சிறை!

திருமணத்துக்கு அப்பாலான உறவுக்கு தடையாக இருந்த 4 வயது மகனை கொன்று புதைத்த இளம் பெண்ணுக்கு 17 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரின் மனைவி வனிதா (29). இவருக்கு 4 வயதான மகன் ஒருவர் இருந்தார்.

வனிதாவுக்கும், இளையான்குடியை சேர்ந்த 28 வயதான நபர் ஒருவருக்கும் இடையில் திருமணத்துக்கு அப்பாலான உறவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் இருவரும் சிறுவனுடன் திருப்பதிக்கு சென்று, வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஜோடியின் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் வனிதாவும் அவரது காதலனும் இணைந்து சிறுவனை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் திகதி அச்சிறுவனை அவர்கள் இருவரும் சேர்ந்து தாக்கியதில் அவன் உயிரிழந்துள்ளான். பின்னர் சிறுவனின் உடலை எடுத்துச் சென்று புதைத்துவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

திரும்பிவந்த ஜோடியுடன் சிறுவன் இல்லாதிருப்பதாலும், அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் நிலவியதாலும் வீட்டு உரிமையாளர் திருப்பதி காவல்நிலையத்துக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபர்கள் இருவரையும் கைதுசெய்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். பின்னர் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதன்பின்னர், அப்பெண்ணின் காதலன் தலைமறைவாகிய நிலையில் தொடர்ந்தும் இந்த வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம் வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து தீர்ப்பளித்தது.

அதற்கமைய, தனது காதலனுடன் இணைந்து மகனை அடித்துக் கொலை செய்தகுற்ற நிரூபணமானதால் வனிதாவுக்கு 17 வருட சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்