கட்டுநாயக்க விமான நிலைய கொவிட் ஆய்வுக் கூடத்தை அகற்றவேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு!
சர்ச்சையை ஏற்படுத்திய கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் ஆய்வுக் கூடத்தை அவ்விடத்திலிருந்து அகற்றவேண்டாம் என சுகாதார அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேற்படி ஆய்வுகூடத்தை அங்கிருந்து அகற்றி, அங்குள்ள உபகரணங்களை மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.
இதுதொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்ட சுகாதார பணியாளர்கள், விமான நிலையத்தின் ஊடாக செல்லும் பயணிகள் அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் ஆவண செய்யுமாறு கோரியிருந்தனர்.
இதுதொடர்பில் நாம் அரச ஆய்கூட தொழிநுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷிடம் வினவியபோது, சுகாதார பணியாளர்களின் இந்தக் கோரிக்கை தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும், இதுவரையில் தமது சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இன்னமும் அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக்கூடத்தை இல்லாமல் செய்யாமல், இதனூடாக பெறக் கூடிய பயன்களை பெற்றுக்கொள்ள இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்