இதயநோய் வருமுன் தவிர்க்க என்ன செய்யலாம்

நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடையே ஏற்பட்டால் மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்படும் மரணங்களை குறைக்க முடியும்.

நவீன வாழ்க்கை முறையில் குறைந்த வயதினரும் இதய நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கடுமையான நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய செயல்பாடு பற்றிய பரிசோதனை முடிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளன. இது சாதாரணமான வலி என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். தொடர்ச்சியான வலி காரணமாக அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். மருத்துவமனையிலேயே அவரது இதயம் செயல்படாமல் நின்று விட்டது. சில மணி நேரத்தில் அவர் பிணமானார். காப்பாற்றுவதற்கு சாத்தியக்கூறு இல்லாத நிலை ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அதிநவீன தீவிர சிகிச்சை அளிப்பட்டது. இதில் இதயம் தொடர்ச்சியாக இயங்குவதற்கான முயற்சி வெற்றி பெற்றது. பிணம் என நினைத்த குடும்பத்தினர் அதிசயிக்கும் வகையில் அவர் மறு உயிர் பெற்றார்.

ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ஒரு ரத்தக்குழாயில் முழுவதுமாக அடைப்பு கண்டறியப்பட்டது. அதிரடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது. தற்போது அந்த இளைஞர் நலமுடன் உள்ளார். இதேபோல 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்தார். கடும் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். இந்த வயதில் மாரடைப்பு வருமா? என்ற சந்தேகத்தில் இதய பரிசோதனை செய்தபோது அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் அவருக்கு பெரிய ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. ஓ.சி.டி. என்ற நவீன பரிசோதனை செய்தபோது வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய ரத்தக்குழாயில் கொழுப்பு படிவம் அடைப்பு அவருக்கு ஏற்பட்டிருந்தது. அடைப்பை நீக்கியவுடன் இதயம் சீராக இயங்க தொடங்கியது. மாரடைப்பு எந்த வயதினருக்கும் வரலாம் என்பதற்கு இவர்கள் உதாரணம்.

கடுமையான மன உளைச்சல், கண்டறியப்படாத ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், உடற்பயிற்சியின்மை, மரபு ரீதியிலான குடும்ப வழி இதய நோய் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது. வயது வித்தியாசம் இன்றி அனைவரும் இதய பரிசோதனை செய்து கொண்டால் பல மரணங்களை தவிர்க்கலாம். நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக இதய பரிசோதனையும், இதய மருத்துவரின் ஆலோசனையையும் தட்டிக்கழிக்காமல் நவீன மருத்துவத்தை செய்து கொண்டு திடீர் மரணத்தை பெருமளவு குறைக்கலாம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மாரடைப்பு நோயாளிகள் இங்கு 360 நிமிடங்கள் தாமதமாக மருத்துவமனையை சென்றடைகிறார்கள் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடையே ஏற்பட்டால் மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்படும் மரணங்களை குறைக்க முடியும். வருடத்திற்கு இருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொண்டால் இதய நோய் வருமுன் தவிர்க்கலாம்.

இதய நோய் சிறப்பு மருத்துவர், ஜவஹர் மருத்துவமனை, ராமநாதபுரம்.