
தேர்தல் காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் கூடுவது அதிகரித்துள்ளது. முகக்கவசம், சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் வருவதால் கொரோனா தொற்று பரவல் பல மடங்கு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வரை கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது.
ஒரு ஆண்டாக ஆட்டி படைத்து வந்த கொரோனா மீண்டும் தீவிரமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தினசரி பாதிப்பு 400 ஆக இருந்த நிலையில் தற்போது 2.200 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் வரை கொரோனா உயிரிழப்பு தமிழகத்தில் 4, 5 பேர் என்று இருந்தது. ஆனால் தற்போது 3 மடங்கு அதிகரித்துள்ளது.
தொற்று பரவல் அதிகரித்து வருவது போல உயிரிழப்பும் உயர்ந்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் கொரோனாவால் 474 பேர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு 5 ஆக இருந்தது. இதுவே 5-ந்தேதி தொற்று பாதிப்பு 543 ஆக அதிகரித்தது. உயிர் பலியும் 5 ஆக இருந்தன.
10-ந் தேதி 671 ஆக மேலும் உயர்ந்துள்ளது. ஆனால் உயிரிழப்பு 5 ஆகவே இருந்தது. 15-ந்தேதி 4 பேராக இருந்தது. 19-ந் தேதி 9 பேராக உயிர் பலி அதிகரிக்க தொடங்கியது.
20-ந் தேதி தொற்று பரவல் 1,243 ஆக அதிகரித்து 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த எண்ணிக்கை 22-ந் தேதி மேலும் அதிகரித்து உயிர் பலி 10 ஆனது. இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்தனர்.
இதுவே 25-ந் தேதி 1,779 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு 11 ஆக அதிகரித்தது. நேற்று உச்சகட்டமாக உயிரிழப்பு 14 ஆக உயர்ந்தது.
தமிழகம் முழுவதும் 2,279 பேருக்கு தொற்று பரவிய நிலையில் உயிர் பலியும் அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 4 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் 2 பேரும், கோவையில் 2 பேரும், கடலூரில் ஒருவரும், கரூரில் ஒருவரும், கிருஷ்ணகிரி, மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.
தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பதற்கு ஏற்ப உயிரிழப்பும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றால் இதுவரையில் 12,684 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 4,232 பேர் பலியாகினர். தேர்தல் காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் கூடுவது அதிகரித்துள்ளது. முகக்கவசம், சமூக இடைவெளி இல்லாமல் வருவதால் தொற்று பரவல் பல மடங்கு அதிகரித்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி ஒருபுறம் போடப்பட்டு வந்தாலும் கூட பாதிப்பு மறுபுறம் கொரோனா அதிகரிக்க தொடங்கி இருப்பது சுகாதாரத்துறையை கவலையடைய செய்துள்ளது.