அனைத்து “சிசு செரிய” பேருந்துக்களையும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, அனைத்து “சிசு செரிய” பேருந்துகளையும் நாளைய தினம் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
நாளைய தினம் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், உரிய வகையில் பேருந்துகளை சேவையில் ஈடுப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
சகல பாடசாலை சேவை பேருந்துகளையும் நாளைய தினம் சேவையில் ஈடுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சில நேரங்களில் பாடசாலை சேவை பேருந்துகள் போதுமானதாக அமையாது.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, நெரிசலின்றி மாணவர்களை ஏற்றிச்செல்வதற்காக, பேருந்து நேர அட்டவணையில் மாற்றங்களை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் வருகையில் அதிகரிப்பு ஏற்பட்டால் குறைந்தளவான காலப்பகுதியில், அதிக பேருந்துகளை சேவையில் ஈடுப்படுத்த எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அதிகாரிகள் விரைவாக நேர அட்டவணையை தயாரித்து வழங்கினால், சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சேவையினை முன்னெடுக்க முடியும் என கெமுனு விஜேரட்ன குறிப்பிட்டுள்ளார்