பெருந்தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்படும் - நிமல் சிறிபால டி சில்வா

பெருந்தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்படும் - நிமல் சிறிபால டி சில்வா

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா வேதன உயர்வுக்கான வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளமை கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா வேதன உயர்வுக்கான வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் நேற்று மனுதாக்கல் செய்தன.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தொழில் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட 18 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பெருந்தோட்ட துறை, நெருக்கடி நிலையை சந்திக்கும் என குறித்த மனுவின் ஊடாக பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதுதவிர பெருந்தோட்ட நிறுவனங்கள் அரசிற்கு பாரியளவு வரியை செலுத்த நேரிடும் எனவும் இதனூடாக நிறுவனங்கள் சிரமத்திற்கு ஆளாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து சட்டமா அதிபருடன் கலந்துரையாடியுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தொழில் திணைக்களம் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாக சட்டமா அதிபர் இணக்கம் வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் வெற்றிப்பெற முடியும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் தொழில் அமைச்சர் கூறியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 வேதனம் வழங்குவதற்கு, தாமதத்தை ஏற்படுத்தும் நோக்கிலே, பெருந்தோட்ட நிறுவனங்கள் இத்தகையை செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பில், நீதிமன்றில் முன்னிலையாகி, உரிய சமர்ப்பணங்களை முன்வைத்து, அவர்களுக்கான வர்ப்பிரசாதங்களை பெற்றுக்கொடுக்க உள்ளதாக தொழில் அமைச்சர் உறுதியளித்துள்ளார்