சீனாவில் பிறக்கப்பட்டுள்ள உத்தரவு! கலக்கத்தில் பொது மக்கள்
சீனாவில் மீண்டும் கொரோனா அபாயம் ஏற்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியிருக்கின்ற சூழ்நிலையில், வுகான் நகரைத் தொடர்ந்து 28 லட்சம் பேரைக்கொண்ட மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மத்திய நகரமான வுகானில் கடந்த டிசம்பர் 1ஆம் திகதி முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் சீனாவிற்குள் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியிருந்தன.
எனினும் சில இடங்களில் குறைந்தளவானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், குவாங்டாங் மாகாணத்தில் நேற்று ஒருவருக்கு வெளிநாட்டு தொடர்பின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, நாடு முழுவதும் 326 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 245 பேர் வுகான் நகரை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவில் 1 கோடியே 12 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள வுகான் நகரில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கு 126 மில்லியன் டாலர் (சுமார் ரூ.945 கோடி இந்திய மதிப்பில்) செலவாகும். இதுவரை 1 கோடி பேருக்கு பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதில் 300 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீனாவில் ஹிலோங் ஜியாங் மாகாணத்தில், ரஷிய எல்லையில் உள்ள முடஞ்சியாங் நகரத்திலும் அங்குள்ள 28 லட்சம் மக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அங்கு கடந்த வாரத்தில் 15 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அனைவருக்கும் இப்போது கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
நகராட்சி சுகாதார அதிகாரிகள் தங்களது நியூக்ளிக் அமில பரிசோதனை குழுவை மேலும் விரிவுபடுத்த தீர்மானித்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,638 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.