
கொரோனா முழுமையாக போகாததால் விழிப்புடன் இருங்கள் - பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நாட்டின் கொரோனா நிலவரம், குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அங்குள்ள நாக்பூரில் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை மறுபடியும் அமல்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு நாம் வந்திருக்கிறோம்.
கொரோனா தொற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அது இன்னும் முழுமையாக போகவில்லை. எதிர்பாராத நேரத்தில் வரலாம். நாம் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டுமானால், நோய்த்தடுப்பு அணுகுமுறைகள், கட்டுப்பாட்டு பகுதிகளை அமல்படுத்துதல், தடுப்பூசி ஆகிய வியூகங்களை பின்பற்ற வேண்டும்.
நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், கவனமாக இருக்க வேண்டும். பெருமளவு மக்கள்தொகை இன்னும் அபாயத்தின் பிடியில்தான் உள்ளது. எனவே, தற்காப்பு முறையை கைவிடாதீர்கள். தடுப்பூசி போடுவதன் மூலம் கொரோனாவுக்கு எதிராக வலிமையான போரை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே, தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘‘உருமாறிய கொரோனா தாக்கம்தான், கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு காரணமா?’’ என்று இந்திய மருத்துவ அறிவியல் கழக தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:- அப்படி எதுவும் உறுதி செய்யப்படவில்லை. நோய் பரிசோதனை எண்ணிக்கையை குறைத்தது, நோயாளியுடன் தொடர்பு கொண்டவர்களை கண்டறிவதை குறைத்தது, பெருமளவு மக்கள் கூடுவது ஆகியவையே இதற்கு காரணங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் பாராட்டு தெரிவித்தார்.