யாழின் ஒரு பகுதியில் இடைநிறுத்தப்பட்டுள்ள போக்குவரத்து!

யாழின் ஒரு பகுதியில் இடைநிறுத்தப்பட்டுள்ள போக்குவரத்து!

யாழ்ப்பாணத்தில் ஒரு பகுதியூடான போக்குவரத்து ஒரு மாதகாலத்திற்கு இடை நிறுத்தப்படுவதாக யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் கோயில் வீதியில், நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான போக்குவரத்து, இன்று முதல் ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் ஆலய வளைவு கட்டுமானப் பணிகள் இடம்பெறுவதால் இடையூறுகள் எற்படாது இருப்பதற்காக இன்று முதல் ஒரு மாத காலத்துக்கு போக்குவரத்துக்கான தற்காலிக தடை அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு மாற்றுப் பாதையாக நல்லூர் ஆலயத்திலிருந்து கோயில் வீதியூடாகச் செல்லும் சிறிய வாகனங்கள், செட்டித்தெரு வீதி- செட்டித்தெரு ஒழுங்கை ( சின்மயா மிஷன் வீதி) ஊடாகவும் நாவலர் வீதியிலிருந்து நல்லூர் ஆலயத்துக்கு கோயில் வீதியில் பயணிக்கும் வாகனங்கள், செட்டித்தெரு ஒழுங்கை- செட்டித்தெரு ஊடாகவும் பயணிக்க முடியும்.

அதேவேளை கனரக வாகனங்கள் இந்தப் பாதையை பயன்படுத்தத் தடை என யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.