யாழில் இரண்டாவது கொரோனா மரணம்

யாழில் இரண்டாவது கொரோனா மரணம்

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள கொவிட் -19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண் மறுநாளான இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு கொவிட் -19 நோய்த் தொற்றுக் காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் கொவிட் -19 விதிமுறைகளுக்கு அமைய இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் மின் தகனம் செய்யப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

ஆசிரியை ஒருவருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் அவரது குடும்பத்தவர்களுக்கு ஏற்பட்ட தொற்றில் பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.

பருத்தித்துறை தும்பளை தெற்கைச் சேர்ந்த 75 வயதுடைய வயோதிப் பெண்ணே உயிரிழந்தவராவார்.

அவர் கடந்த 23ஆம் திகதி கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டமை கண்டறியப்பட்டது. அவரை நொச்சிகாமம் கொவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

அங்கிருந்து கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் அமைந்துள்ள கொவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் நேற்று வீடு திரும்பினார். எனினும் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

சம்பவத்தை அடுத்து சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் படி அவர் கொவிட் -19 நோயால் உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. அதனால் வயோதிபப் பெண்ணின் சடலத்தை மின்தகனத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டாவது கொவிட் -19 நோயாளி உயிரிழப்பு இதுவாகும்