எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொலை- ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இந்த பதற்றத்தை பயன்படுத்தி எல்லை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவுகின்றனர். இந்த முயற்சிகளை இந்திய ராணுவம் முறிடியத்து வருகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் பிம்பர் காலி செக்டாரை ஒட்டி உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், இன்று அதிகாலையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சில பயங்கரவாதிகள் எல்லைப்பகுதியை கடந்து இந்திய பகுதிக்குள் ஊருவியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். இதனால் மற்ற பயங்கரவாதிகள் பின்வாங்கினர். இதன்மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதுபற்றி இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், ‘காவல்துறை அளித்த சிறப்பு தகவலின்படி எல்லைப்பகுதியில் படைகள் உஷார்படுத்தப்பட்டு, பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதி கொல்லப்பட்ட பகுதியில் இருந்து துப்பாக்கி மற்றும்மேகசின்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது’ என்றார்.