டாக்டர், நர்ஸ் கவனிப்பதில்லை... தற்கொலை எண்ணம் வருகிறது - கொரோனா பாதித்த நடிகை பகீர் புகார்
இந்தி நடிகை இஷிகா போரா. இவர் மாடலிங் தொழிலும் செய்து வருகிறார். இஷிகா போராவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அசாம் மாநிலம் நகோனில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று இஷிகா போரா குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: ‘நான் மும்பையில் வசிக்கிறேன். சொந்த ஊருக்கு வந்தபோது கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறேன். டாக்டரும் நர்சும் என்னை கவனிப்பது இல்லை. எதற்காக இங்கே வைத்துள்ளனர் என்று புரியவில்லை.
மஞ்சள் கலந்த வெதுவெதுப்பான நீர், வைட்டமின் சி, வெள்ளரி, தக்காளி, அஸ்வகந்தா போன்றவற்றின் மூலம் கொரோனாவை ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும். ஆனால் எனக்கு எதுவும் தரவில்லை. வீட்டில் சத்தான உணவு, சூப்கள், பழங்கள் மூலிகை மருந்துகள் சாப்பிட்டும் உடற்பயிற்சிகள் செய்தும் குணமாகி இருப்பேன். ஆஸ்பத்திரியில் குளிர்ந்த தண்ணீரும் உணவும் தருகிறார்கள். கொசு கடிக்கிறது. வேதனையில் இருக்கிறேன். தற்கொலை உணர்வும் வருகிறது'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.