
டேம் வீதியில் பெண்ணின் சடலத்தை கைவிட்டு சென்ற நபர் அடையாளம் காணப்பட்டார்
கொழும்பு, டேம் வீதியில் பயணப் பொதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் குருவிட்ட - தெப்பனாவை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணும், அவரை பயண பொதியில் கொண்டு வந்து டேம் வீதியில் விட்டு செல்லும் நபரும், கடந்த 28 ஆம் திகதி ஹங்வெல்லை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள விடுதி ஒன்றிற்கு செல்லும் காட்சி சீ.சி.ரி.வியில் பதிவானதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மறுநாள் அந்த விடுதியில் இருந்து பயண பொதியொன்றுடன் சந்தேகநபர் மாத்திரம் வெளியேறும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து சந்தேகநபர் ஹங்வெல்லையில் இருந்து புறக்கோட்டைக்கு பயணிக்கும் பேருந்து ஒன்றில் ஏறும் காணொளியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர், புத்தல காவல்நிலையத்தில் கடமையாற்றும் விடுமுறையில் சென்றுள்ள உப காவல்துறை பரிசோதகர் என தெரியவந்துள்ளது