அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள்!

அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள்!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் பிரதேச சபையின் உறுப்பினர்கள் அனைவரும் பங்குபற்ற வேண்டும் என்றும் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்பட வேண்டும் என்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

22 உறுப்பினர்களை கொண்ட பிரதேச சபையில் கட்சி ரீதியாக ஒரு உறுப்பினர் கலந்துகொள்ளலாம் என பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த விடயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரதேச சபை உறுப்பினர்கள் தங்கள் வாட்டாரங்களில் உள்ள பிரச்சினைகளை பிரதேச அபிவிருத்திக்கழு கூட்டத்தில் எடுத்துக்கூற முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

சாதாரணமாக கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் அழைக்கப்படும் இந்த கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்களை அழைப்பதில் என்ன பிரச்சனை. எமது சபையில் பிரதேச செயலாளருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் காரணமாகவே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்,கரைதுறைப்பற்று, துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேச செயலக கூட்டங்களுக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சகல உறுப்பினர்களும் கலந்துகொள்ள பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.