மிஹார குணரத்ன தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை விசேட விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

மிஹார குணரத்ன தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை விசேட விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

பேலியகொட காவல்நிலையத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்னவின் மகன் மிஹார குணரத்ன தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மற்றும் அவரால் காவல்துறையினர் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் என்பன தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் இருந்து பேலியகொட காவல்துறையை விலக்கி மற்றுமொரு விசேட விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இரண்டு முறைப்பாடுகளும் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது இரு தரப்பு சட்டத்தரணிகளும் முன்வைத்த சமர்ப்பணங்களுக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேலியகொடை காவல்நிலையத்தில் காவல்துறையினர் தம்மை தாக்கியதாக சட்டத்துறை மாணவரான மிஹார குணரத்ன கடந்த 4ஆம் திகதி அறிவித்திருந்தார்.

நிதிமோசடி தொடர்பில் ஹெரோயின் போதை பொருளுடன் நைஜீரிய பிரஜைகள் நால்வர், பெலருஸ் பெண்கள் இருவர் மற்றும் இலங்கையர்கள் இருவர் அண்மையில் களனி குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்னவின் சேவையாளர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் அவருக்கு உணவு பொதி வழங்குவதற்காக மிஹார குணரத்ன காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார்.

மிஹார குணரத்ன தமது தொலைபேசியில் அவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி கொடுக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாமென காவல்துறையினர் அறிவுறுத்தியதோடு வாய்த்தர்க்கம் அதிகரித்து காவல்துறையினர் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இந்தநிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி மீள அழைக்கப்படவுள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் பேலியகொடை காவல்துறையின் நான்கு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.