
தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சிடம் தெளிவான வேலைத்திட்டம் ஒன்று இல்லை - வைத்தியர் பிரசாத் கொலம்பகே
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சிடம் தெளிவான வேலைத்திட்டம் ஒன்று இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் இன்னும் பாதுகாப்பற்ற நிலைமையிலேயே இருப்பதாக அந்த சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் பிரசாத் கொலம்பகே இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து தெரிவித்தார்.
நாட்டில் இதுவரையில் 5 லட்சம் பேரை அண்மித்த அளவானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 808 பேர் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினராகும்.
நாட்டில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் சுகாதார அமைச்சிடம் இதுதொடர்பான உரிய வேலைத்திட்டம் ஒன்று இல்லாத காரணத்தினால் மக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள நேர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தடுப்பூசியை வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு குழுக்களுக்கு புறம்பாக பலர் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டு வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எதிர்காலத்தில் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 123 பேர் இதுவரையில் தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டனர்.
அத்துடன் 205 ராஜதந்திரிகளுக்கும் அஸ்ட்ரா செனீகா கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான செயற்பாட்டு மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது ஆசிரியர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன் முதற்கட்டமாக தற்போது கல்விப் பொதுத்தராதார சாதாரண தரபரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்குமாறு இலங்கை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது