
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 291 டெங்கு நோயளர்கள் பதிவு
மட்டக்களப்பு - ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் இறுதி வரையில் 291 டெங்கு நோயளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் எம்.எச்.எம்.தாரிக் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மாஞ்சோலை கிராமத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச செயலகம், பிரதேச சபை, சமூகமட்ட அமைப்புக்கள், காவல் நிலையம் என்பன ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து சேவையாற்றி வருகின்றனர்.
அத்துடன் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்; டெங்கு நோய் பரவும் வகையில் தமது சுற்றுச்சூழலை வைத்திருந்த 149 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 27 பேருக்கு எதிராக காவல்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் எம்.எச்.எம்.தாரிக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த மாதம் மாத்திரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,070 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரையில் அந்த மாவட்டத்தில் 1,965 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் இதுவரையில் 3,141 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.