
1000 ரூபாவுக்காக நாளை மீண்டும் கூடுகிறது வேதன நிர்ணய சபை
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதன அதிகரிப்பு சம்பந்தமாக வேதன நிர்ணய சபை நாளைய தினம் மீண்டும் கூட உள்ளது.
கடந்த 8ஆம் திகதி கூடிய வேதன நிர்ணய சபை, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக 900 ரூபாவும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 100 ரூபாவும் சேர்த்து ஆயிரம் ரூபா நாளாந்தம் வழங்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
அதே நேரத்தில் இந்த தீர்மானத்திற்கு ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி குறித்த காலப்பகுதி வரையில் 200க்கும் அதிகமான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆட்சேபனைகளை விசாரணை செய்வதற்காக கடந்த 19 ஆம் திகதி மீண்டும் வேதன சபை கூடியது.
எனினும் அன்றைய தினம் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தின் 8 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்த நிலையில், முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் ஒரு பிரதிநிதி மாத்திரமே பங்கேற்றிருந்தார்.
எனவே, கூட்டத்தை நடத்துவதற்கான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாதமை காரணமாக, குறித்த தினத்தில் கூட்டத்தை நடத்த முடியாமல் போன நிலையில் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதேநேரம் 1,000 ரூபா வேதன உயர்வு தொடர்பில் நாளை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையிலும், முதலாளிமார் சம்மேளனத்தின் உரிய பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால், வேதன கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய செயற்படுவது குறித்தும் அரச தரப்பு அவதானம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பள நிர்ணய சபையானது, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றின் தலா 8 பிரதிநிதிகளையும், அரசாங்கத் தரப்பினர் 3 பிரதிநிதிகளையும் கொண்டுள்ளது.
சம்பள நிர்ணய சபை கூடுவதற்கான குறைந்தப்பட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 5 ஆகும்.
அதில், தொழிற்சங்க பிரதிநிதிகள் இரண்டு பேரும், முதலாளிமார் சம்மேளனத்தின் இரண்டு பிரதிநிதிகளும், அரசாங்க பிரிதிநிதி ஒருவரும் உள்ளடங்க வேண்டும்.
சம்பள நிர்ணய சபையின் பிரதிநிதி ஒருவர், தொடர்ச்சியாக மூன்று பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதை தவிர்ப்பாராயின், அவரை நீக்குவதற்கும், புதிய பிரதிநிதியை நியமிப்பதற்கும் தொழில் அமைச்சருக்கு அதிகாரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது