வைத்தியசாலை சிற்றூழியர்களின் பணிப்புறக்கணிப்பால் நோயாளிகள் அவதி

வைத்தியசாலை சிற்றூழியர்களின் பணிப்புறக்கணிப்பால் நோயாளிகள் அவதி

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பல வைத்தியசாலைகளின் சிற்றூழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை காரணமாக, வைத்தியசாலைகளுக்கு சென்ற நோயாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு லட்சம் தொழில்வாய்ப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சிறைச்சாலை பல்நோக்கு மேம்பாட்டு அதிகாரிகள் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்து அவர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை நலச்சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த குருகே எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை, ஒரு லட்சம் தொழில்வாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சம் தொழில்வாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் பெற்றுள்ளவர்கள் நிரந்தர ஊழியர்களாக சுகாதார சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர் என பரவிவரும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இவ்வாறானதொரு கருத்து சுகாதார ஊழியர்களுக்கு மத்தியில் பரவிவருவதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த வேலையில் அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டதாக அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.