இலங்கை வந்துள்ள இம்ரான் கான் இன்று ஜனாதிபதியை சந்திக்கிறார்

இலங்கை வந்துள்ள இம்ரான் கான் இன்று ஜனாதிபதியை சந்திக்கிறார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருக்கு இடையிலான விசேட இருதரப்பு கலந்துரையாடல் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது இரு நாடுகளுகளினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏதுவான பல விடயங்கள் தொடர்பாக வெற்றிகரமான உடன்பாடுகள் எட்டப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதலீடு, வர்த்தக மேம்பாடு, விவசாயம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகள் தொடர்பிலும் பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 5 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இதேவேளை, இதன்போது கருத்துரைத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதம், மத அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தாம் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து செயற்படுவோம் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நீண்ட காலமாக இருதரப்பு பங்காளராக விளங்குவதுடன், இலங்கை எப்போதும் பாகிஸ்தானை நெருங்கிய மற்றும் உண்மையான நண்பராக கருதுகிறது.

பாகிஸ்தான், மிகவும் அத்தியவசியமான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்கிய நெருங்கிய நட்பு நாடாகும்.

தாம் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் பயங்கரவாத அமைப்புடன் போராடுவதற்கு நேர்ந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2009 மே மாதம் அந்த பயங்கரவாத அமைப்பை முழுமையாக தோல்வியடைய செய்வதற்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் நேற்று இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்கு ஒப்புக்கொண்டதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

மேலும் பாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் வழங்கப்பட்ட வாய்ப்புகளைத் தொடர இதன்போது இரு தரப்பும் இணங்கியுள்ளது

கொவிட் தொற்று உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா மற்றும் விமானச் சேவை துறைகளின் செயற்பாட்டை அதிகரிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதக் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க உரிய முகவர் நிறுவனங்கள் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு தற்போதைய பொறிமுறைகளுடன் முன்னோக்கி செல்வதற்கு இதன்போது ஒப்புக்கொள்ளப்பட்டதாக பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.