
சஹ்ரான் ஹாசிமிடம் பயிற்சி பெற்ற பெண்களில் 7 பேர் கைது - மூவர் விளக்கமறியலில்
ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாசிமிடம் பயிற்சி பெற்ற பெண்கள் தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களில் 7 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலும் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களின் உறவினர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த 15 பெண்களில் 5 பெண்கள் சாய்ந்தமருது தாக்குதலில் மரணித்தனர்.
அவர்களில் சஹ்ரான் ஹாசிமின் தாய், சகோதரி, மொஹமட் ரில்வானின் மனைவி மற்றும் மட்டகளப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவரின் மனைவி ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாசிமிடம் பயிற்சி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் மாவனெல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட யுவதி வழங்கிய தகவல்களுக்கு அமைய இந்த விடயங்கள் தெரிய வந்துள்ளன.
அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.