1, 000 ரூபா சம்பள விவகாரம்: வேதன நிர்ணய சபை கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

1, 000 ரூபா சம்பள விவகாரம்: வேதன நிர்ணய சபை கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

முதலாளிமார் சம்மேளனத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்மை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் குறித்த வேதன நிர்ணய சபையின் கூட்டம் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் சார்பில் 8 பேரும், அரசாங்க சார்பில் 3 பேரும் நேற்றைய கூட்டத்திற்காக பிரசன்னமாகியிருந்தனர். தொழில் கட்டளை சட்டத்திற்கு அமைய வேதன நிர்ணய சபை கூட்டத்திற்காக முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் குறைந்தது 2 பேராவது கலந்து கொள்ள வேண்டும்.

எனினும் முதலாளிமார் சம்மேளனம் சார்பில் நேற்றைய தினம் ஒருவர் மாத்திரமே கலந்து கொண்டதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ரகீர்த்தி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதன் காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் அதிகரிப்பு குறித்த வேதனம் நிர்ணய சபையின் கூட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 8ஆம் திகதி கூடிய வேதன நிர்ணய சபை, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக 900 ரூபாவும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 100 ரூபாயும் சேர்த்து ஆயிரம் ரூபாய் நாளாந்தம் வழங்கப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அன்றைய தினம் அறிவித்திருந்தார்.

அதே நேரத்தில் இந்த தீர்மானத்திற்கு ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. குறித்த காலப்பகுதி வரை 200க்கும் அதிகமான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆட்சேபனைகளை விசாரணை செய்வதற்காக நேற்றைய தினம் வேதன நிர்ணய சபை மீண்டும் கூடவிருந்தது. எனினும் முதலாளிமார் சம்மேளனத்தின் பெரும்பான உறுப்பினர்கள் இன்மை காரணமாக அந்த கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.