
இலங்கைக்கு எதிரான பிரித்தானியாவின் பிரேரணைக்கு அரசாங்கம் எதிர்ப்பு
ஜெனீவாவில் ஆரம்பமாக உள்ள மனித உரிமைகள் பேரவையின் 46வது மாநாட்டில் இலங்கை தொடர்பாக பிரித்தானியா தலைமையிலான மைய நாடுகள் இணைந்து முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
அந்த பிரேரணையை ஏற்றுக்கொள்ள போவதில்லை என அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள பல பிரேரணைகள் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை நிராகரிக்கவுள்ளதாகவும் அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்தார்.
இலங்கை தொடர்பாக பிரித்தானியா தலைமையிலான மைய நாடுகள் இணைந்து முன்வைக்கவுள்ள பிரேரணையொன்று நேற்று வெளியிடப்பட்டிருந்தது.
இதில் போர் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை திரட்டுதல் ஆய்வு செய்தல் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி எதிர்கால விசாரணைக்கான முதற்கட்ட நடவடிக்கையாக அவற்றை மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறை மீதான தோல்வி குறித்து சுட்டிக்காட்டி உள்ளதுடன் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமைகள் நிலைமையை கண்காணித்து அறிக்கைப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மனித உரிமைகள் தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு சுயாதீனமற்றது எனவும் அந்த பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது