
எண்ணெய் குத உடன்படிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக இந்தியா அறிவிப்பு!
2003 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை எண்ணெய் குத உடன்படிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை மேற்கோள்காட்டி த ஹிந்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
திருகோணமலை எண்ணெய் குதம் தொடர்பில் எழுந்துள்ள விவாதம் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள த ஹிந்து, 35 வருடங்களுக்கு இந்த உடன்படிக்கை செல்லுபடியாகும் என சுட்டுக்காட்டியுள்ளது.
இலங்கையின் எரிசக்தி அமைச்சர், புதிய உடன்படிக்கை தொடர்பில் தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கும் த ஹிந்து, தற்போது லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் மூலம் நிர்வகிக்கப்படும் 15 எண்ணெய் குதங்களுக்கு மேலதிகமாக மிகுதி 84 எண்ணெய் குதங்களை இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் முகாமை செய்வது தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறெனினும், அண்மையில் கொலன்னாவை எண்ணெய் களஞ்சிய வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் உதய கம்மன்பில, திருகோணமலை எண்ணெய் குதங்களை மீண்டும் இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
இதுதொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக அமைச்சர் நேற்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்த நிலையில், அதன்போது, பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு பெரும்பகுதி உரித்தாகும் வகையில் உருவாகும் அரச நிறுவனம் ஒன்றின் ஊடாக எண்ணெய் குதத் தொகுதி முகாமை செய்ய இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் தெரிவித்தார்