இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது

நாட்டில் தற்போது அடையாளம் காணப்படும் கொவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது.

கடந்த நாட்களில் நாள் ஒன்றில் 900 இற்கும் அதிகமான கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

எனினும் அதன் எண்ணிக்கை தற்போது 600 முதல் 500 இடைப்பட்ட அளவில் பதிவாகி வருகின்றது.

இதன்படி நாட்டில் நேற்றைய தினம் 514 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

அவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 105 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் கண்டி, கம்பஹா மாவட்டங்களில் தலா 68 பேருக்கும், களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் தலா 51 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 25 பேருக்கும் அம்பாறை மாவட்டத்தில் 24 பேருக்கும், நேற்றைய தினம் தொற்றுறுதியாகியுள்ளது.

அதேநேரம், கேகாலை மாவட்டத்தில் 19 பேருக்கும், முல்லைத்தீவில் 13 பேருக்கும், நுவரெலியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 9 பேருக்கும், பதுளையில் 11 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வெலிமடை - குருத்தலவா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவருக்கும் இரண்டு ஆசியர்களுக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக வெலிமடை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.மலர்வண்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டிருந்த பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளுக்கு அமையவே அவர்களுக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே பகுதியில் மேலும் 5 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் பொரகஸ் பகுதியில் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக வெலிமடை பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பசறை பிரதேசத்திலும் இன்றைய தினம் இரண்டு பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர் கரண் தெரிவித்துள்ளார்.

பசறை கோயில் கடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கும், மீரியபெத்த - தம்பேவெல பகுதியை சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவருக்கும் இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.