மஸ்கெலிய தோட்ட முகாமையாளர்களை தாக்கிய 8 பேர் விளக்கமறியலில்!

மஸ்கெலிய தோட்ட முகாமையாளர்களை தாக்கிய 8 பேர் விளக்கமறியலில்!

மஸ்கெலியா - ஓல்டன் பகுதியில் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோர் தாக்கப்பட்டு சாணித்தண்ணீர் ஊற்றிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் நேற்றைய ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 7 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது,

கடந்த 17 ஆம் திகதி மஸ்கெலியா - ஓல்டன் பகுதியிலுள்ள தோட்ட முகாமையாளரின் இல்லம் சேதப்படுத்தப்பட்டு முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோர் தாக்கப்பட்டனர்.

அத்துடன் அவர்களுக்கு சாணித்தண்ணீர் ஊற்றப்பட்ட நிலையில் அவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தமது நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக வழங்குமாறு கோரி கடந்த 3 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கனிப்பு போராட்டம் காரணமாக மறுநாள் மீதமுள்ள பச்சை தேயிலையை அரைக்குமாறு தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் சேவையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும் அவர்கள் இதனை நிராகரித்திருந்த நிலையில் இதன்காரணமாக தோட்ட நிறுவனத்திற்கு 15 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டதாக தோட்ட முகாமையாளரால் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

இதன்காரணமாக தோட்ட முகாமைத்துவத்துக்கும் சேவையாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதோடு கடந்த 17 ஆம் திகதி தோட்ட முகாமையாரின் இல்லம் சேதமாக்கப்பட்டு முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோர் தாக்குதலுக்கு இலக்காகியதோடு அவர்கள் மீது சாணித்தண்ணீர் ஊற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.