
சூரிய சக்தி மின்நிலையங்களை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதியளிக்கவில்லை
வடக்கின் மூன்று தீவுகளில் சூரிய சக்தி மின்நிலையங்களை ஸ்தாபிக்க மாத்திரம் சீன நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதியளிக்கவில்லை என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சூரிய, காற்றாலை, டீசல், மின்கலம் ஆகியவற்றின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வலுசக்தி செயற்திட்டத்திற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சார சபையின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த செயற்திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த செயற்திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியளிப்பின் கீழ் முன்னெடுக்கப்படுவதுடன் ஆரம்பகட்ட செயற்திட்டம் 5 வருடங்களுக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
நெடுந்தீவு, நயினா தீவு, அனலைத்தீவு மற்றும் எழுவை தீவு ஆகிய 4 தீவுகளில் இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்க அப்போதைய அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் முதலில் எழுவைத்தீவை பயன்படுத்தி மாத்திரம் இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி பரிந்துரை செய்திருந்தது.
அந்த செயற்திட்டம் பல வருடங்களுக்கு முன்னர் நிறைவடைந்ததுடன் எழுவைத்தீவில் தற்போதும் அந்த செயற்திட்டத்தின் ஊடாகவே மின்சார விநியோகம் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் நெடுந்தீவு, நயினா தீவு மற்றும் அனலைத்தீவு ஆகியவற்றில் இந்த செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த கலந்துரையாடலின் இறுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் கேள்வி பத்திர நிர்ணயங்களுக்கு அமைய சர்வதேச ஒதுக்க முறைமைகளின் கீழ் நிர்மாண ஒப்பந்த நிறுவனத்தை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் நிர்மாண ஒப்பந்தம் மாத்திரம் ஈ.பி.சி. முறைமையின் கீழ் வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பரிந்துரைத்திருந்தது.
இதன்படி பல நிறுவனங்கள் இதற்காக விண்ணப்பித்துள்ளதுடன் அவற்றில் சீனா நிறுவனம் ஒன்றும் இந்திய நிறுவனம் ஒன்றும் இருந்ததாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒதுக்க முறைமையின் இறுதியில் ஹினோசிமா இச்சின் என்ற சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன் இதன் முழு மதிப்பு 12 மில்லியன் அமெரிக்க டொலர் என குறிப்பிடப்படுகிறது