
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்றியது கொரோனா
இலங்கையில் தற்போது பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொண்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பதில் சுகாதார அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்தார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர் காணலிலேயெ அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காலி மற்றும் கேகாலை பகுதிகளைச் சேர்ந்த சிலருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசியை பெற்றுக்கொண்டதன் பின்னர் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காமையும் இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த தடுப்பூசி பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுவதற்கு 3 வார காலம் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் சந்தர்ப்பத்திலும், அவர்களுக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், அவர்களும் இவ்வாறே தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரும், சுகாதார தரப்பினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு பதில் சுகாதார அமைச்சர் ஷன்ன ஜயசுமன கேட்டுக்கொண்டுள்ளார்