பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

உரு திரிபடைந்த கொவிட்-19 வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை உடனடியாக அமுலாகும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் அறிவித்தலுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

14 நாட்கள் தனிமைப்படுத்தல் மற்றும் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தல் போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு வெளிநாட்டு உறவுகள் அமைச்சு இந்த தடையை தளர்த்தியுள்ளது.

பிரித்தானியாவிலிருந்து நாட்டுக்கு பிரவேசிப்போருக்கு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் ஊடாக தேவையான சுகாதார வழிகாட்டல்கள் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கல்ப் வான் சேவையின் விமானங்கள் மீள சேவையில் ஈடுபடுகின்றன.

இதன்படி குறித்த வான் சேவையின் விமானங்கள் வாரத்தின் இரண்டு நாட்கள் பஹரேனில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பிரவேசிக்கவுள்ளன.

அதேபோல, மத்திய கிழக்கு நாடுகளுக்கான புதிய வான் சேவையான ஜசீரா விமான சேவையானது முதற்தடவையாக இலங்கைக்கான விமான போக்குவரத்தை ஆரம்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது