கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு அச்சம் கொள்ள தேவையில்லை

கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு அச்சம் கொள்ள தேவையில்லை

கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள அனைவரும் எந்தவித அச்சமும் இன்றி தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ பிள்ளே தெரிவித்துள்ளார்.

தற்பொழுது பயன்படுத்தப்படும் தடுப்பூசியினால் பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களினால் அச்சம் கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்த தடுப்பூசி திட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மக்களுள் பெரும்பான்மையினர் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் தான் கொரோனா தடுப்புக்கான எமது திட்டத்தை வெற்றிக் கொள்ள முடியும் சிலர் இந்த திட்டத்திற்கு எதிராக தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் முன்னெடுப்பதை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம்.

சமூக ஊடகங்களான முகப்புத்தகத்தில் இவ்வாறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இதனால் பக்கவிளைவுகள் பெருமளவில் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இதுவரை 250,000 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றப்பட்டோர் மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தகவல்கள் எதுவும் இல்லை. பொதுவாக இவ்வாறான தடுப்பூசி ஏற்றும் போது சிறியளவிலான பக்கவிளைவு ஏற்படக்கூடும். இது வழமையான ஒன்று. மக்களுள் பெரும் பாலானோர் இந்த தடுப்பூசியை ஏற்றிக்கொண்டால் தான் இத்திட்டத்தை வெற்றிக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா தடுப்புக்கான தடுப்பூசியை வழங்குவதில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பட்டியலில் முக்கியத்துவம் வழங்கப்படுவதை பற்றியும் கருத்து தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் அடிக்கடி பொதுமக்களிடம் தொடர்புகளை மேற்கொள்ளும் குழுவினராவர். இதனால் பொதுமக்களிடம் இத்தொற்று பரவாமல் இருக்க இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.