விசேட வைத்தியர்களின் இடம்மாற்றப் பட்டியல் தயாரிப்பில் தாமதம்- சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

விசேட வைத்தியர்களின் இடம்மாற்றப் பட்டியல் தயாரிப்பில் தாமதம்- சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

விசேட வைத்தியர்களின் வருடாந்த இடம்மாற்றப் பட்டியலைத் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நோயாளிகளின் பராமரிப்பு சேவைகளில் வீழ்ச்சி ஏற்படுமென, சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்று பரவி வருகின்ற நிலையில், விசேட வைத்திய சேவையை நாடு முழுவதும் சமமாக பராமரிக்க வேண்டுமெனின், வருடாந்த இடமாற்றங்கள் துல்லியமாகவும், வழக்கமான நடைமுறையிலும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக விசேட வைத்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் செனல் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம்மாற்றப் பட்டியல் வருடத்தின் ஒக்டோபர் முதலாம் திகதிக்குள் வெளியிடப்பட வேண்டும், மேலும் மேன்முறையீடுகள் ஒக்டோபர் 15ற்குள் செய்யப்பட வேண்டும். அதன்பின்னர், மேன்முறையீட்டுக் குழுவின் இறுதி முடிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்த வருடத்தின் நவம்பர் முதலாம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும். புதிய ஆண்டின் ஜனவரி முதலாம் திகதிக்குள் வைத்திய நிபுணர்கள் புதிய பணியிடங்களுக்கு நியமனங்கள் பெறுவதற்கான வாய்ப்பை இது உறுதி செய்யும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது பல்வேறு நிர்வாக சிக்கல்களைத் தடுக்கும் எனவும், விசேட வைத்தியர்களின் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு உள்வாங்குதல் போன்ற விடயங்களையும் இது இலகுவாக்கும் எனவும், வைத்தியர் செனல் பெர்னாண்டோ ஊடக அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வர வேண்டிய விசேட வைத்தியர் இடம்மாற்றங்களை அமுல்படுத்துவதில் சுகாதார அமைச்சும் தமது பொறுப்பை தவறவிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்ற வகையில், சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் தயவான மற்றும் உடனடி கவனம் திரும்புமென என நாங்கள் நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்லையெனில் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படும் வைத்திய சேவையின், விசேட வைத்திய சேவையை வழங்க முடியாத நிலை ஏற்படுவதோடு, நோயாளிகளின் பராமரிப்பு சேவைகள் சீர்குலையும் எனவும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் யுத்த காலத்தில் கூட, உயர் தரத்தையும், சமத்துவத்தையும் பேணும் வகையில், நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் விசேட வைத்திய அதிகாரிகளை நியமித்ததன் ஊடாக, நாட்டின் சுகாதார சேவை, உலகின் பிற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்ததாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் செனல் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.