குருந்தூர் மலையில் வெளித் தோன்றிய சிவலிங்கம் போன்ற உருவம் தூபியின் முடிப் பகுதி!

குருந்தூர் மலையில் வெளித் தோன்றிய சிவலிங்கம் போன்ற உருவம் தூபியின் முடிப் பகுதி!

முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் அகழ்வு பணியின் போது காணப்பட்ட சிவலிங்கம் போன்ற உருவம் அநுராதபுர காலத்து பாரிய தூபியின் முடிப் பகுதி என தெரிவிக்கப்படுகின்றது.

தொல்பொருள் திணைக்கள இராஜாங்க அமைச்சர் விதுர விக்கரமநாயக்க தனது முகநூலில் இந்த கருத்தை பதிவேற்றியுள்ளார்.

அநுராதபுர காலத்து 01ஆம், 02ஆம் நூற்றாண்டு காலத்திற்குரிய பாரிய தூபியின் முடி பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் இதன் நீளம் 6 மீற்றர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் உண்மையாக காலக்கட்டம் இன்னும் ஒரு வாரத்துக்குள் கூறப்படும் என்றும் அராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் மக்களது பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கடந்த 18.1.2021 அன்று தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் அகழ்வாராச்சி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சுமார் ஒரு வார காலத்திற்கு பின்னர் அப்பகுதிக்கு வருகை தந்த அகழ்வாராச்சியாளர்கள் இராணுவத்தினரையும் இணைத்து அகழ்வாராச்சி பணிகளை மேற்கொள்கின்றவர்கள் தொடர்ச்சியாக அகழ்வாராச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த குருந்தூர் மலை பகுதியிலே லிங்க வழிபாடுகள் இடம்பெற்றமைக்கான பல்வேறு ஆதாரங்கள் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் முகமாக குருந்தூர்மலைப் பகுதியில் இடம்பெறும் அகழ்வாராச்சி பணிகளின் போது ஆதி லிங்கம் என கருதப்படும் லிங்க உருவத்தை ஒத்த சிலை ஒன்று வெளி தோன்றியிருந்தது.

,தேவேளை முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை ( எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் திரு.NKS திருச்செல்வம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார் என கூட்டமைப்பின் உறுப்பினர் சிறீதரன் தரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.