நாளைய தினம் பாடசாலைகள் திறப்பு

நாளைய தினம் பாடசாலைகள் திறப்பு

நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியாகியிருந்த மேலும் 22 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று வெளியேறியுள்ளனர்.

 

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த நிலையில்  குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 

அதேநேரம் நாட்டில் மேலும் இரண்டு பேருக்கு இன்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

 

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் முகாமில்; தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுறதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றுதியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 35 ஆக அதிகரித்துள்ளது.

 

அத்துடன் 362 பேர் நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று முதல் அமுலாகும் வகையில் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

 

இந்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் கொவிட்-19 காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் 105 நாட்களுக்கு பின்னர் மீண்டும் நாளைய தினம் திறக்கப்படவுள்ளது.

 

கல்வி அமைச்சர் டலஸ் அலஹபெரும மற்றும் குறித்த அமைச்சின் அதிகாரிகளுடன் கடந்த நாட்களில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

 

இதற்கமைய நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய நாளைய தினம் பாடசாலை திறக்கப்படுகின்ற போதிலும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் சேவையாளர் மாத்திரம் நாளைய தினம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

 

எதிர்வரும் ஒரு வாரக்காலப்பகுதியில் பாடசாலைகளை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் அவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அத்துடன் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்கள் கட்டங்கட்டங்களாக பாடசாலைக்கு அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.