விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவதூறு- 500 டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பி வந்த 500 டுவிட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை சிலர் பரப்பி வந்தனர்.

இந்தியா இன ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாக சித்தரித்தும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு இருந்தன

இவற்றை காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் உளவுப்படையினர் அனுப்பி இருந்தது தெரிய வந்தது.

டுவிட்டர் தளம் மூலமாக இவற்றை அனுப்பி இருந்தனர். எனவே அந்த கணக்குகளை முடக்கும்படி மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தது.

இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டம் 69 ஏ-ன்படி அவதூறான கருத்துக்களை இணையதளங்கள் மூலமாக வெளியிடுவது கிரிமினல் குற்றமாகும்.

இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்து இருந்தது.

இது சம்பந்தமாக 257 கணக்குகளை முடக்கும்படி ஏற்கனவே மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியது. அதில் 126 கணக்குகளை டுவிட்டர் முடக்கம் செய்தது. அதன் பிறகு இதேபோல் 1,178 கணக்குகளை முடக்கும்படி மீண்டும் கடிதம் அனுப்பி இருந்தது.

அதில் 583 கணக்குகளை முடக்கம் செய்து இருப்பதாக டுவிட்டர் நிறுவனம் கூறி இருக்கிறது.

இவற்றில் சில கணக்குகள் நிரந்தரமாக மூடப்படும். மற்ற கணக்குகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது