பட்டமளிப்புக்கு தயாராகும் யாழ் பல்கலை - 2 ஆயிரத்து 608 பேருக்கு பட்டம்
யாழ். பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இம்மாதம் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
இரண்டு நாட்களிலும், ஆறு அமர்வுகளாக நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப்படிப்புகள், உள்வாரி, வெளிவாரி என 2 ஆயிரத்து 608 பேர் பட்டங்களைப் பெறவுள்ளனர் என யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு,
யாழ். பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில், யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன் முன்னிலையில் எதிர்வரும் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கில் இடம் பெறவுள்ளது.
பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன் பட்டதாரிகளுக்கான பட்டங்களை வழங்கவுள்ளார்.
இரண்டு நாட்கள் - ஆறு அமர்வுகளாக இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.
முதலாம் நாளான 24 ஆம் திகதி, புதன்கிழமை ஆயிரத்து 388 பேருக்குப் பட்டங்களும், டிப்ளோமாக்களும் வழங்கப்படவுள்ளன.
காலை 8.30 மணி முதல் 11 மணி வரை நடைபெறவுள்ள முதலாவது அமர்வில், நிதி முகாமைத்துவத்தில் கலாநிதி பட்டம், விவசாய உயிரியலில் முது தத்துவமாணி, விவசாய இரசாயனத்தில் முது தத்துவமாணி, சைவ சித்தாந்தத்தில் முது கலைமாணி ஆகிய உயர் பட்டத் தகைமைகளை தலா ஒவ்வொருவரும், வியாபார நிருவாக முதுமாணிப் பட்டத்தினை 55 பேரும் பெறவுள்ளனர்.
இவர்களுடன், பொறியியல் விஞ்ஞானமாணிப் பட்டத்தை 52 பேரும், கலைமாணி (விசேட பகுதி) பட்டத்தை 160 பேரும், வணிகமாணி பட்டத்தை 88 பேரும், தாதியியல் விஞ்ஞான மாணி சிறப்புப் பட்டத்தை 09 பேரும், மருந்தகவியல் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தை 14 பேரும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தை 21 பேரும் பெறவிருக்கின்றனர்.
இவற்றுடன், யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்படும் வெளிவாரி பட்டங்களைப் பெறுபவர்களில் 114 கலைமாணி பட்டதாரிகளதும் 2 நடனமாணி பட்டதாரிகளதும் பெயர்கள் வாசிக்கப்பட்டு அவர்களின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.
முற்பகல் 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ள இரண்டாவது அமர்வில், இந்து நாகரிகத்தில் கலாநிதி பட்டம், கல்வியியலில் முது தத்துவமாணி, வரலாற்றில் முது தத்துவமாணி, கிறிஸ்தவ நாகரிகத்தில் முது தத்துவமாணி ஆகிய உயர் பட்டத் தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், கல்வியியலில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமா தகைமையினை 66 பேரும் பெறவுள்ளனர்.
இவர்களுடன், கலைமாணி (விசேட பகுதி) பட்டத்தை 168 பேரும், வியாபார நிருவாகமாணி (சிறப்பு) பட்டத்தை 22 பேரும், கலைமாணி (நடனம்) பட்டத்தை 50 பேரும், கலைமாணி (வாய்ப்பாட்டு) பட்டத்தை 77 பேரும், கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்) பட்டத்தை 22 பேரும் பெறவிருக்கின்றனர்.
இவற்றுடன், யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்படும் வெளிவாரி பட்டங்களைப் பெறுபவர்களில் 7 வணிகமாணி (பழைய பாடத்திட்டம்) பட்டதாரிகளதும், 16 வணிகமாணி (புதிய பாடத்திட்டம்) பட்டதாரிகளதும், 36 வியாபார முகாமைத்துவமாணி பட்டதாரிகளதும் பெயர்கள் வாசிக்கப்பட்டு அவர்களின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.
பிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 4.30 வரை நடைபெறவுள்ள மூன்றாவது அமர்வில், மனித வள முகாமைத்துவத்தில் கலாநிதி பட்டம், புவியியலில் முது தத்துவமாணி ஆகிய உயர் பட்டத் தகைமைகளைத் தலா இருவரும், பௌதிகவியலில் முது தத்துவமாணி, மண் விஞ்ஞானத்தில் முது தத்துவமாணி ஆகிய உயர் பட்டத் தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், ஆங்கிலம் - இரண்டாம் மொழியாக கற்பித்தலில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமா தகைமையினை 18 பேரும் பெறவுள்ளனர்.
இவர்களுடன், வியாபார நிருவாகமாணி பட்டத்தை 259 பேரும், சட்டமாணி பட்டத்தை 49 பேரும், தாதியியல் விஞ்ஞான மாணி சிறப்புப் பட்டத்தை 22 பேரும், மருந்தகவியல் விஞ்ஞான மாணி சிறப்புப் பட்டத்தை 21 பேரும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தை 26 பேரும் பெறவிருக்கின்றனர்.
இரண்டாம் நாளான 25 ஆம் திகதி, வியாழக்கிழமை ஆயிரத்து 220 பேருக்குப் பட்டங்களும், டிப்ளோமாக்களும் வழங்கப்படவுள்ளன.
காலை 8.30 மணி முதல் 11 மணி வரை நடைபெறவுள்ள 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் நான்காவது அமர்வில் தமிழில் கலாநிதி பட்டம், மெய்யியலில் முது தத்துவமாணி, அரசியல் விஞ்ஞானத்தில் முது தத்துவமாணி ஆகிய உயர் பட்டத் தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், கல்வியியலில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமா தகைமையினை 77 பேரும் பெறவுள்ளனர்.
இவர்களுடன், வைத்தியமாணி, சத்திர சிகிச்சைமாணி பட்டத்தை 118 பேரும், மருத்துவ விஞ்ஞானமானி பட்டத்தை ஒருவரும், சித்த வைத்தியமாணி, சத்திர சிகிச்சைமாணி பட்டத்தை 70 பேரும், பொதுக் கலைமாணி பட்டத்தை 127 பேரும், பொதுக் கலைமாணி (ஆளில்லா நிலையில்) பட்டத்தை ஒருவரும் பெறவுள்ளனர்.
இவற்றுடன், வியாபார நிருவாக டிப்ளோமா தகைமை பெறும் ஒருவரதும், நுண் நிதியியலில் டிப்ளோமா தகைமை பெறும் 25 பேரதும் உடற்கல்வி டிப்ளோமா தகைமை பெறும் ஒருவரதும், பெயர்கள் வாசிக்கப்பட்டு அவர்களின் தகைமைகள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.
முற்பகல் 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ள ஐந்தாவது அமர்வில், சந்தைப்படுத்தலில் கலாநிதி பட்டம் ஒருவரும், சித்த வைத்தியத்தில் முது தத்துவமாணி பட்டம், தமிழில் முது தத்துவமாணி பட்டம் ஆகிய உயர் பட்டத் தகைமைகளைத் தலா இருவரும், கல்வியியலில் முதுமாணி பட்டத்தை 98 பேறும் பெறவுள்ளனர்.
இவர்களுடன், விவசாய விஞ்ஞானமாணி பட்டத்தை 62 பேரும், கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி (4 ஆண்டுகள்) பட்டத்தை 03 பேரும், கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி (3 ஆண்டுகள்) பட்டத்தை ஒருவரும், கணினி விஞ்ஞானமாணி பட்டத்தை 02 பேரும், பிரயோக விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தை 10 பேரும், விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தை 106 பேரும், கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தை 18 பேரும், விஞ்ஞானமாணி (பொது) பட்டத்தை 98 பேரும் பெறவுள்ளனர்.
பிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 4.30 வரை நடைபெறவுள்ள ஆறாவது அமர்வில், புவியியலில் கலாநிதி, பொருளியலில் முது தத்துவமாணி பட்டம் ஆகிய உயர் பட்டத் தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், கல்வியியலில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமா தகைமையினை 25 பேரும் பெறவுள்ளனர்.
இவர்களுடன், கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தை 26 பேரும், பிரயோக விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தை 33 பேரும், விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தை 91 பேரும் பெறவுள்ளனர்.
இவற்றுடன், வவுனியா வளாகத்தின் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பமாணி (பொது) பட்டத்தை 25 பேரும், தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியலில் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தை 14 பேரும், சுற்றுச் சூழலியல் விஞ்ஞானமாணி (பொது) பட்டத்தை 15 பேரும், சுற்றுச் சூழலியல் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தை 09 பேரும், விஞ்ஞானமாணி ( பிரயோக கணிதம், கணினி) பொதுப் பட்டத்தை 22 பேரும், கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தை 04 பேரும், வியாபார முகாமைத்துவமாணி (சிறப்பு) பட்டத்தை 52 பேரும், திட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி (பொது) பட்டத்தை 35 பேரும், வியாபார முகாமைத்துவமாணி (பொது) பட்டத்தை 26 பேரும் பெறவிருக்கின்றனர்.