வட மாகாண கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடல்..!
வட மாகாண கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது.
கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது கிளிநொச்சி வலயம் இரண்டு கல்வி வலயங்களாக பிரிக்கப்பட்டமைக்கான அனுமதிக் கடித்தினையையும், கொக்குவில் இந்துக்கல்லூரியில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு கொரிய நாட்டின் அன்பளிப்பான 5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களுக்குரிய காசோலையையும் கல்வியமைச்சர் வடமாகாண ஆளுநரிடம் கையளித்தார்.
வட மாகாணத்தில் கல்வி மற்றும் சுகாதாரதுறைகளில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
துறைசார் நிறுவனங்களுக்கு சென்றிருந்த போது அதனை அவதானித்ததாகவும், மேலும் சில பிரச்சினைகள் குறித்து துறைசார் திணைக்களத் தலைவர்களால் அறிக்கையிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் கல்வித்துறையில் அறிக்கையிடப்பட்ட பிரச்சினைகளை பிரதமர் ஊடாக கல்வி அமைச்சருக்கு அறிக்கை இடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அவற்றில் குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரதுறைகளில் ஆளனி பற்றாக்குறை காணப்படுவதாகவும் ஆசிரியர்களுக்கு கஷ்டப்பிரதேசங்களுக்கு சென்று வருவதற்கான பிரயாண வசதி குறைபாடுகள் காணப்படுவதாகவும், குறித்த கஷ்டப்பிரதேச பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட சலுகை ஏற்பாடுகளை பாதீட்டினுள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் சிறப்பாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட மட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அதிகாரங்கள் மூலம் ஆளனி வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுவருவதாகவும் வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.