யாழ்.போதனா வைத்தியசாலையில் வேலை நிமித்தம் சென்றிருந்தவருக்கு கொரோனா உறுதி- சீல் வைக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்படும் வங்கி கட்டடத்துக்கு வளிச்சீராக்கி (AC) பொருத்துவதற்கு வருகை தந்த தென்னிலங்கையைச் சேர்ந்தவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நகரில் 4 கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் 32 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்படும் வங்கி கட்டடத்துக்கு வளிச்சீராக்கி பொருத்துவதற்கு கடந்த மாதம் வருகை தந்த ஒருவருக்கு எழுதுமட்டுவாழ் வீதித் தடையில் வைத்து பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டன. அவருக்கு தொற்று உள்ளமை நேற்று முன்தினம் புதன்கிழமை உறுதிப்படுத்தபட்டுள்ளது.
அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரால் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவர் யாழ்ப்பாணம் நாக விகாரை விடுதியில் தங்கியிருந்தமை கண்டறியப்பட்டது.
அத்துடன், வங்கிக் கட்டட வேலைகள் நிறுத்தப்பட்டதுடன், தொழிலாளிகள் சிலர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர் சென்றதாகத் தெரிவித்த நாக விகாரைக்கு அண்மையில் உள்ள மருந்தகம் மூடப்பட்டு அங்கு பணியாற்றுபவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த நபர் சென்றிருந்தார் என்ற காரணத்தால் யாழ்ப்பாணம் வேம்படிச் சந்தியில் உள்ள உணவகம், வைத்தியசாலை வீதியில் உள்ள ஐஸ்கிறீம் கடையுடன் கூடிய உணவகம் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன.
இவ்வாறு மூடப்பட்ட நிறுவனங்களில் உள்ளவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டு தொற்று இல்லை என அறிக்கை கிடைத்தால் திறக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.