வடமாகாண மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு ஜனாதிபதி செயற்படுகின்றார் - வடமாகாண ஆளுநர்

வடமாகாண மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு ஜனாதிபதி செயற்படுகின்றார் - வடமாகாண ஆளுநர்

நாம் காலனித்துவ ஆட்சியில் பெற்ற சுதந்திரம் தனியே அரசியல் சுதந்திரம் மட்டுமன்றி இம் மக்களுக்கு வழங்கப்படவேண்டிய வாழ்வியல் சுதந்திரம் என்பதை அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 73 வது சுதந்திர தின நிகழ்வானது இலங்கை முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் வட மாகாண ஆளுநர் பங்குபற்றிய சுதந்திர தின நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

நீண்டகாலத்திற்கு பின் ஒரு மாவட்டத்தின் சுதந்திர தின நிகழ்வில் தனக்கு பங்குகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

பல சவால்களுக்கு மத்தியில் சுதந்திரக் காற்றை சுவாசித்த நாம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வடமாகாண மக்களின் வாழ்வியலை முன்னேற்ற வேண்டுமென்ற அவாவினை முன்நிறுத்தி அவர்களின் தேவைகளை கருத்திற் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். .

சுதந்திரம் என்பது முக்கியமாக இரு விடயங்களில் காணப்படுகின்றன. ஒரு மனிதனுக்கு செய்யக்கூடாத விடயங்களை செய்வதும் செய்யப்பட வேண்டிய விடயங்களை செய்யாமல் விடுவதுமே ஆகும். இதில் ஒரு மனிதனுக்கு செய்யப்பட வேண்டிய பல விடயங்கள் செய்யப்படாது மறந்துபோகும் தருணங்களே அதிகமாகும்.

மக்களுக்கு கிடைக்கவேண்டிய சந்தர்ப்பம் மறுக்கப்படும் விடயங்களில் தடைகளை தகர்த்து மக்களின் அபிவிருத்தியை முன்கொண்டு செல்லவேண்டிய கடமைப்பாட்டில் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் மிகக் கவனமாக செயற்படவேண்டும்.

எனவே நாம் காலனித்துவ ஆட்சியில் பெற்ற சுதந்திரம் தனியே அரசியல் சுதந்திரம் மட்டுமன்றி இம் மக்களுக்கு வழங்கபடவேண்டிய வாழ்வியல் சுதந்திரம் என்பதை அனைவரும் கருத்திற் கொண்டு அதனை வழங்கும் முக்கிய நிறுவனமாக திகழும் மாவட்ட செயலகம் அதனோடு இணைந்த பிரதேச செயலகம் மற்றும் அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.