
மக்களின் வறுமையை போக்க அரசாங்கம் எடுத்துள்ள புதிய நடவடிக்கை
பருப்பு, மாவு, சீனி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட 28 வகையான பொருட்களுக்கு பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கு உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடி இறக்குமதியாளர்களுடன் எதிர்கால விலை தொடர்பில் உடன்பாடொன்றுக்கு வந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.
கிராமத்துடன் கலந்துரையாடல் - வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு செயல்திட்டம் மற்றும் 2021 வரவு செலவுத் திட்டம் யதார்த்தமாகும் தேசிய ஒருங்கிணைப்பு துணை குழு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று அலரி மாளிகையில் நிறுவப்பட்டது.
இதனபோதே பந்துல மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் முதல் இன்று காணப்படும் விலையை விட குறைந்த விலைக்கு சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்களின் ஊடாக அப்பொருட்களை நாடு முழுவதும் விநியோகிப்பதாக தெரிவித்தார்.
வறுமை காரணமாக வீடுகளின் அருகே மின்சாரம் இருந்தும், நீர் இருந்தும் அதனை நுகர முடியாது நிலையில் சிலர் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் சுட்டிக்காட்டினார்.
ஆரம்பத்தில் மின்சாரம் அற்ற வீடுகளாக 35000 வீடுகள் அடையாளம் காணப்பட்ட போதிலும், தற்போது அந்த எண்ணிக்கை 125000 ஆகக் காணப்படுவதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
அதற்கமைய இதுவரை மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகள் அற்ற வீடுகளுக்கு எதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டிற்கு முன்னதாக அதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை முன்னெடுப்போம் என்ற திரு.பசில் ராஜபக்ஷ அவர்களின் முன்மொழிவிற்கு அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உடன்பாடு தெரிவித்தனர்.
மின்சாரம் மற்றும் நீர் வசதியற்ற வீடுகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு எதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டிற்கு முன்னதாக தீர்வை பெற்றுக் கொடுப்பது பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரது கடமை என பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.