மக்களுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! யமுனாநந்தா கோரிக்கை
இனிவரும் காலங்களில் கொவிட்- 19 தடுப்பூசி மக்களுடன் நெருங்கி பழகுகின்றவர்களுக்கும் வழங்கப்படுதல் அவசியம் என யாழ்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,
கடந்த ஒரு வருட காலமாக கொவிட் நோய் உலகெங்கும் பரவி வருகின்றது. இன்றுவரை உலகில் 103 மில்லியன் மக்களுக்கு நோய் ஏற்பட்டுள்ளது. 2.2 மில்லியன் மக்கள் இதனால் உயிரிழந்துள்ளார்கள்.
அடுத்து இன்று உலகின் மிக வேகமாக மூன்றுவகை கொவிட் வைரஸ் பரவி வருகின்றது. இந்நிலையில் கொவிட் நோய்க்கான தடுப்பு மருத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது.
குறிப்பாக வளர்முக நாடுகளில் அதிக அளவில் தடுப்பூசி உபயோகிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் முதற்கட்டமாக சுகாதார சேவையில் பணியாற்றுபவர்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊசி போடுவதற்கு முக்கிய காரணம் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை எமது உடலில் ஏற்படுத்துவதனால் உயிரிழப்புகளை தவிர்க முடியும்.
கட்டாயம் கொள்வனவு செய்து விநியோகிக்கும் போது முதலில் யார் கூடுதலாக நோயாளிகளுடன் பழகுகின்றார்களோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் குறிப்பாக வர்த்தகர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், பேருந்து நடத்துனர் மற்றும் சாரதிகள் என மக்களுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அடுத்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு ஊசி வழங்கப்பட வேண்டும்.
இது 18 வயது தொடக்கம் 60 வயதுடையவர்களுக்கு பொதுவாக போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேல் இதுவரை பக்கவிளைவுகள் கண்டறியப்படவில்லை. 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் இதற்கான ஆய்வுகள் நடத்தப்படவில்லை.
கற்பிணி தாய்மார்கள், பாலுட்டும் தாய்மார்களுக்கும் இந்த ஊசி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார்.