நடிகை வீட்டிற்கு புகுந்து பொருட்களை உடைத்த போதை கும்பல்
மலையாள தொலைக்காட்சி நடிகை அர்ட்ரா தாஸ். இவர் பல டி.வி தொடர்களில் நடித்து கேரள ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். திருச்சூரில் உள்ள பட்டிப்பரம்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்குள் சிலர் புகுந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி நாசம் செய்தனர். பூந்தொட்டிகளை தூக்கி வீசி உடைத்தனர். வீட்டில் இருந்த நடிகையின் தாய் சிவகுமாரியையும் அடித்து காயப்படுத்தினார்கள். பின்னர் அங்கிருந்து ஓடி விட்டனர். காயம் அடைந்த சிவகுமாரி ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டு உள்ளார். தாக்குதல் நடந்தபோது நடிகை அர்ட்ரா தாஸ் தந்தையுடன் திருவனந்தபுரத்துக்கு சென்றதால் தப்பினார்.
இதுகுறித்து பழயனூர் போலீசார் விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ் தரப்பில் கூறும்போது “நடிகையின் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் பல வருடங்களாக எல்லை பிரச்சினை உள்ளது. இதன் காரணமாக மோதல் ஏற்பட்டு இருக்கலாம். விசாரித்து வருகிறோம்” என்றனர்.