யாழ். மாநகர சபையின் புதிய வரவு - செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது

யாழ். மாநகர சபையின் புதிய வரவு - செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது

யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான புதிய வரவு – செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது.

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் 15 பேர் நடுநிலை வகித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் யாழ். மாநகர சபையின் மேயராகப் பதவி வகித்த இ.ஆர்னோல்ட் சமர்ப்பித்த 2021ஆம்ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரு தடவைகள் தோற்கடிக்கப்பட்டதைஅடுத்து அவர் பதவி இழந்தார்.

அதன் பின் நடைபெற்ற மேயர் தெரிவில் இ. ஆர்னோல்ட் மற்றும் வி.மணிவண்ணன் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் வி.மணிவண்ணன் மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

அதையடுத்து அவரால் இன்று புதிய வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்.மாநகர சபையில் இன்று மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். ஒருவர் ஆதரவாக வாக்களித்தார்.

முன்னாள் மேயர் இ. ஆர்னோல்ட் இன்று சபைக்கு வரவில்லை. அதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள் எதிராகவும், அக்கட்சியின் 10 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.

ஈ.பி.டி.பி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன்படி 23 மேலதிக வாக்குகளால் வரவு -செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.