வடக்கை அச்சுறுத்தும் கொரோனா! சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

வடக்கை அச்சுறுத்தும் கொரோனா! சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

வடக்கு மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் நால்வர் சாவகச்சேரி மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் வாகனங்களில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 254 பேரின் மாதிரிகளும் யாழ். போதனா வைத்தியசாலையில் 326 பேரின் மதிரிகளும் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 12 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, நால்வர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள்.

ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்.

மேலும் நால்வர் யாழ். மாவட்டத்துக்கு வருகை தந்த பாரவூர்தி, போக்குவரத்து சேவை வாகனங்களின் பணியாளர்கள் ஆவார். அவர்களிடம் எழுதுமட்டுவாழில் வைத்து மாதிரிகள் பெறப்பட்டிருந்தன.

அவ்வாறு அடையாளம் காணப்பட்ட நால்வரில் இருவர் மன்னாரைச் சேர்ந்தவர்கள்.

கிளிநொச்சியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் ஒருவருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வவுனியா நகர வர்த்தகர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்.

மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மற்றைய நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்" என பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.

இதேவேளை இன்று வவுனியா நகர கொரோனா கொத்தணியில் மேலும் 13 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.