முல்லைத்தீவில் பெற்றோர் போராட்டம்! பாடசாலை வாயிலில் பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு

முல்லைத்தீவில் பெற்றோர் போராட்டம்! பாடசாலை வாயிலில் பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றக் கோரி பெற்றோர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலையானது அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளின் பெயர் பட்டியலுக்குள் உள்வாங்கப்படவில்லை என தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமது பாடசாலை தேசிய பாடசாலைக்குள் வாங்குவதற்கான சகல தகுதிகளும் இருந்த போதும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தேசிய பாடசாலைகளுக்கு தரம் உயர்த்தப்பட்ட பாடசாலைகளின் பட்டியலில் தமது பாடசாலை உள்வாங்கப்படவில்லை என தெரிவிக்கும் பெற்றோர், இது எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான தெளிவுபடுத்தலை தமக்கு வழங்க வேண்டும் எனக் கோரியே குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அண்மையில் மாவட்ட அரசாங்க அதிபர் வலயக்கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடிய போது எமது பாடசாலை தெரிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த போதும் தற்போது எமது பாடசாலை அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது எவ்வாறு? அல்லது ஏன் தெரிவு செய்யப்படவில்லை எனக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 8 மணிக்கு பாடசாலை முன்பாக கூடிய பெற்றோர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலை அதிபரை சென்று சந்தித்ததோடு பாடசாலை அதிபரை பெற்றோர்கள் போராட்டம் நடத்துகின்ற வீதிக்கு வருகை தந்து இதற்கான காரணங்களை கூறுமாறும் அழைத்திருந்தனர். இதன் போது பாடசாலை அதிபர், தன்னால் உரிய தரவுகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான மேலதிக தகவல்கள் தெரியாது என்று தெரிவித்திருந்தார்.

அதன் போது பெற்றோர்கள் குறித்த இடத்திற்கு வலய கல்வி பணிப்பாளர் வருகை தந்து இதற்கான பதிலை வழங்க வேண்டும் என கோரி பாடசாலை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் காலை 7 மணிக்கு முன்னதாகவே பாடசாலையின் இரண்டு வாயிலுக்கும் முன்பாக பொலிசார் குவிக்கப்பட்டு பாடசாலை வளாகத்திற்குள் பெற்றோர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு கடமைகளில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலிசார் தடுத்து நிறுத்தியிருக்கின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரால் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.