அமெரிக்காவில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் -அதிபர் ஜோ பைடன் திட்டம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இதற்கான செயல்திட்டங்கள் தொடங்கி உள்ளன. முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போட விரும்புவதாகவும், 100 நாட்களுக்கு மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பார் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்த கட்டுப்பாடுகள், பிரேசில், அயர்லாந்து, பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதியில் உள்ள அமெரிக்கர் அல்லாதவர்களுக்கு பொருந்தும் என கூறப்படுகிறது. 

 

 

மேலும் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற பயணிகளுக்கும் அதிபர் பைடன் இன்று தடையை நீட்டிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

 

அமெரிக்காவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை 2.5 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 4.19 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.