யாழ்பல்கலைக்கழக மாணவி உட்பட வடக்கில் ஐவருக்கு கொரோனா
யாழ்பல்கலைக்கழக மாணவி உட்பட வடக்கில் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவிக்கையில்,
"யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 276 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
அவர்களில் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தபட்டது. அவர்கள் மூவரும் கொழும்பிலிருந்து வருகை தந்த நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
மேலும் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை இன்றைய பரிசோதனையில் உறுதிப்படுத்தபட்டது. அவரும் கொழும்பிலிருந்து வருகை தந்த நிலையில் சுயதனிமைப்படுத்தபட்டிருந்தவர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவி ஒருவருக்கு தொற்று உள்ளமையும் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மாத்தளையிலிருந்து கற்கைகளுக்கு திரும்பிய நிலையில் விடுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார்" என்றுஅவர் மேலும் தெரிவித்தார்.