காதலனை நம்பி சென்ற கிளிநொச்சி யுவதிக்கு நேர்ந்த கதி! காட்டில் விட்டுவிட்டு மாயமான இளைஞன்
கிளிநொச்சியை சேர்ந்த 22 வயதான யுவதி ஒருவர், தன்னை ஏமாற்றிய காதலன் மீது புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.
அத்துடன் குறித்த யுவதியின் கைகளில் கூரிய பொருட்களால் கீறப்பட்ட காயங்கள் காணப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில், முல்லைத்தீவு காட்டுக்குள் அழைத்துச் சென்ற காதலனே அந்த காயத்தை ஏற்படுத்தியதாகவும் யுவதி முறையிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.
நடமாடும் பொருள் விற்பனை நிறுவனமொன்றில் பணியாற்றிய யுவதி, கூடவே பணியாற்றிய புதுக்குடியிருப்பு வாலிபனை காதலித்து வந்துள்ளார்.
அதன் பின்னர் காதலன் கொழும்பிற்கு சென்றிருந்த நிலையில் சிறிது நாளில் யுவதியையும் அவரது குடும்பத்தினருக்கு தெரியாமல் கொழும்பிற்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தியுள்ளார்.
இதனையடுத்து யுவதியின் பெற்றோர் பல இடங்களிலும் தேடியதுடன், பொலிசில் முறையிட்ட பின்னர் யுவதி மீட்கப்பட்டார்.
இந்த நிலையில், சில நாட்களின் முன்னர் குடும்பத்தினருக்கு தெரியாமல் காதலனுடன் ஓடிப்போன யுவதி, புதுக்குடியிருப்பிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்து பின்னர், காதலன் புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள காடொன்றிற்கு தன்னை அழைத்து சென்று தங்கியிருந்ததாக முறைப்பாட்டில் தெரிவித்தார்.
அதன் பின்னர், யுவதியை அநாதரவாக கைவிட்டு இளைஞன் தலைமறைவாகியதுடன் கூரிய பொருட்களால் தனது கைகளில் காயங்கள் ஏற்படுத்தி சித்திரவதைக்குள்ளாக்கியதாகவும் யுவதி முறைப்பாட்டில் தெரிவித்தார்.
மேலும் வீட்டுக்கு செல்லமாட்டேன், காதலனை கண்டுபிடித்து சேர்த்து வையுங்கள் என யுவதி பொலிஸ் நிலையத்தில் அடம்பிடித்து வருவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன