யாழில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா பரிசோதனை
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
யாழ். போதனா வைத்தியசாலையில் இதுவரை 41 ஆயிரத்து 248 பேருக்கும், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் ஆறாயிரத்து 435 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனைகளில் 644 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று பரவல் நெருக்கடியிலும் யாழ். போதனா வைத்தியசாலை ஏனைய சிகிச்சைகளையும் தடையின்றி மேற்கொண்டு வருகின்றது.
எனவே குருதி அமுக்கம், நீரிழிவு, இருதய நோய் போன்ற நீண்டநாள் நோயாளிகள் கிரமமாக அவர்களுக்குரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதாவது கடந்தகாலப் பகுதிகளில் அதிக குருதி அமுக்கம் மற்றும் இருதய நோயுடைய சிலர் உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு வருகை தராமல் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் 2020ஆம் ஆண்டு டெங்கு நோய்த் தாக்கத்தால் 866 பேர் சிகிச்சைபெற்று வெளியேறி உள்ளனர். இது 2019ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது குறைவாகவே காணப்படுகின்றது.
எனினும் தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு பரவக்கூடிய அபாயம் காணப்படுவதால் பொதுமக்கள் விழிப்பாக இருப்பது அவசியம் எனத் தெரிவித்தார்