31 நாடாளுமன்ற உறுப்பினர்களை சுயதனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்..!

31 நாடாளுமன்ற உறுப்பினர்களை சுயதனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்..!

நாட்டில் நேற்றைய தினம் 569 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 48,949 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 564 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் சிறைச்சாலை கொத்தணியுடன் 4 பேரும் அடங்குவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 45,186 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் நேற்று கொவிட்19 உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையில் 6618 பேர் கொவிட் 19 நோயாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 766 பேர் நேற்று கொவிட் 19 தொற்றிலிருந்து குணடைந்தனர்.

அதேநேரம் நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 42091 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்ட 10 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சுய தனிமைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், அமைச்சர் வாசு தேவ நாணயக்காரவுடன் தொடர்புடைய 15 நாடாளுமன்ற பணிக்குழாமினரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, எதிர்வரும் 13 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற பணிக்குழாமினருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த நிலையில் தேவையேற்படின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதில் உள்வாங்கப்படுவார்கள் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கிம்க்கும் கொவிட்19 தொற்று உறுதியானது.

இதேநேரம், பிரதமரின் அரசியல் விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் குமாசிறி ஹெட்டிகேவுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இந்த நிலையில், அவருடனும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடனும் தொடர்பை பேணிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரை தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் எம்.ஏ சுமந்திரன், கயந்த கருணாத்திலக்க மற்றும் தலதா அத்துகோரள ஆகியோருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எவ்வாறுயினும் தனக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்படினும் தான் தனிமைப்படுத்தலில் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக எம்.ஏ சுமந்திரன் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தற்போது வரை சுய தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு 31 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.